அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும், பரவலாக மழையும் பெய்யக்கூடும். கடலில் சூறாவளி 90 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இந்த சூழலில் டவ்-தே புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் கனமழை பெய்யும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15-5-2021), தலைமைச் செயலகத்தில், அரபிக் கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இக்கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கலந்துகொண்டு, புயல் சின்னம் குறித்த தற்போதைய நிலவரத்தையும், மழை பெய்யவிருக்கிற சாத்தியக் கூறுகளையும் எடுத்துக் கூறினார்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 14-5-2021 காலைக்குள் கரைக்கு திரும்புமாறு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு முதல்-அமைச்சர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுள், 162 மீன்பிடிப் படகுகள் தற்போது கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்கவும் உரிய அறிவுரைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்படுகிறவர்களை முகாம்களில் தங்க வைக்கும்போது, கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும், முழு வீச்சில் வருவாய்த் துறையினர் கண்காணிப்புப் பணிகளைச் செய்யுமாறும், அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணித்து வரும்படியும் முதல்-அமைச்சர் கோரினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்களும் மதுரை (2), கோயம்புத்தூர் (1) மற்றும் நீலகிரி (1) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் அக்குழுக்களைக் கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத் துறைச் செயலாளர் ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.