``அ.தி.மு.க-வினர் செய்த ஊழல் பட்டியல்களை முழுமையாக எடுங்கள் நம் வழக்கறிஞர் அணி மூலமாக வழக்கு தொடுத்து ஆளும்கட்சிக்கு அடுத்த சிக்கல்களை ஏற்படுத்துவோம்.’’

``ஊழல் அமைச்சர் ஒருவரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு அராஜக போக்கோடு காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்களும் ஆட்சிக்கு வருவோம். இதை காவல்துறையினர் மறந்துவிட வேண்டாம்" என்று மூத்த அமைச்சர் ஒருவருக்கு செக் வைக்க பல வியூகங்களை வகுத்திருக்கிறது தி.மு.க தலைமை என்கிறார்கள் உடன்பிறப்புகள். அத்தோடு ஆளும்கட்சியினர் செய்யும் ஊழல்களைப் பட்டியலிட்டு புள்ளி விவரத்தோடு வழக்கு தொடுத்து அடுத்தடுத்த சிக்கல்களை ஆளும்கட்சிக்கு கொடுக்க தி.மு.க-வினர் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து இன்று காலை காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று நேற்று திடீரென அறிவிக்கப்பட்டது. அதில், கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியிருந்தது. தி.மு.க நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் போடும் பொய் வழக்குகள் குறித்தும் சட்டவிரோதக் கைது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும் காணொலிக்காட்சி மூலமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தி.மு.க தொண்டர்களைப் பாதுகாக்க மாவட்டம் வாரியாக வழக்கறிஞர்கள் குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் தி.மு.க-வினர் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் என்ன நடந்தது ஸ்டாலின் என்ன பேசினார்? நிர்வாகிகள் என்ன பதிலளித்தார்கள் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை நேற்று திடீரென போலீஸார் கைது செய்தனர். இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியல் இனத்தவர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தி.மு.க

தி.மு.க

அதைத்தொடர்ந்து அவசர அவசரமாக டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒன்றிணைவோம் வா திட்டத்துக்கு வந்த ஆதரவைப் பார்த்து ஆளும்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியாமலும், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழுத் தோல்வியடைந்துவிட்ட விரக்தியில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஐடி விங்க் நிர்வாகிகள் மீதும், பொய் வழக்கு போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது. மக்களைக் காக்க வேண்டியவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டு மக்களைக் காக்கும் நம் நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது.

மேலும், ``கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகை மாவட்டங்களில் தி.மு.க-வினர் மீது ஐந்து வழக்குகளுக்கும் மேல் போட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் மூத்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார். வழக்கு போடுவதற்கும் கைது செய்வதற்கும், அவர், காவல்துறைக்கு நிழல் அமைச்சராகச் செயல்படுகிறார். ஊழல் அமைச்சருக்கு காவல்துறை அதிகாரிகள் கைகட்டிக்கொண்டு சேவகம் செய்கிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்களும் ஆட்சிக்கு வருவோம்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதைக் காவல்துறையினர் மறந்துவிட வேண்டாம்" என்று கடுமையாக எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தறிகெட்டுத் திரியும் அமைச்சர்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தைத் தவறான வழியிலேயே பயன்படுத்திடத் துடிக்கிறார். கொரோனா காலத்தில், டெண்டர் ஊழல்கள், கொரோனா மருத்துவ உபகரணங்கள், கிருமிநாசினிகள், உள்ளிட்ட மருந்துகள் கொள்முதல் செய்வதில் ஏகப்பட்ட ஊழல்கள் என்று ஒவ்வொரு நாளும் `கஜானாவைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும்’ முதலமைச்சர், அவரது அமைச்சரவை சகாக்களையும், காக்க முயல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதைத்தொடர்ந்து, `மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க-வினர் செய்த ஊழல் பட்டியல்களை முழுமையாக எடுங்கள். நம் வழக்கறிஞர் அணி மூலமாக வழக்கு தொடுத்து ஆளும்கட்சிக்கு அடுத்த சிக்கல்களை ஏற்படுத்துவோம்’ என்று சொல்லியிருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அத்தோடு இவ்விவகாரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, `வழக்கு தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பின்னால் தி.மு.க இருக்கிறது. குறிப்பாக நான் இருக்கிறேன்’’ எனத் தி.மு.க நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருந்தது அவரது பேச்சு’’ என்றனர்.