நாளை (13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று (12) தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வௌியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும்.

இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வௌியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

´உதாரணமாக இன்று மே மாதம் 12 ஆம் திகதி. இன்றைய தினத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வௌியேற முடியும். நாளை 13 ஆம் திகதி அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள்1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும். 0 இருக்கும் போது அது இரட்டை எண்ணாக கருதப்படும். அதன்படி, இரட்டை எண்ணுக்கு உரிய தினத்தில் பயணிக்க முடியும்´ என்றார்.

இதற்கிடையில், சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்றி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனுமதிக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் பின்வருமாறு,

* சுகாதார சேவை
* பொலிஸ் மற்றும் முப்படை
* அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்களுக்கான அரச அதிகாரிகள்
* அத்தியாவசிய விநியோக விநியோகஸ்தர்கள்
* அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ( பயன்பாட்டு சேவைகள்)
* குடும்பத்துக்கு நெருக்கமானவரின் இறுதிச் சடங்கிற்காக ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்)
* வௌிநாடு செல்லுதல்/ வௌிநாட்டில் இருந்து வருகை அல்லது ஏற்றுமதி / இறக்குமதி செயற்பாடுகளுக்கு தேவையான சேவைகள் ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்)