தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. அப்போது தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி முழு ஊரடங்கு இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே ஒன்றாம் தேதியும் முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என்றும் கூறியது.
மே ஒன்றாம் தேதி அமலாகும் முழு ஊரடங்கு குறித்து ஏப்ரல் 28ம் தேதியே அறிவிக்கலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மருந்து, தடுப்பூசி மருந்தை கூடுதலாக விநியோகிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக்கூறிய உயர்நீதிமன்றம் தமிழகம், புதுச்சேரியின் நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மே 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.