கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயத்திற்கான ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாக இருப்பினும் அதில் நான்கு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயத்திற்கான சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீது 05 நாட்களாக உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட பரிசீலனை நேற்று (23) நிறைவு பெற்றுள்ளது. இதன்போதே ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன இதனை குறிப்பிட்டார். 

மனுக்கள் மீதான மேலதிக எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் குழாம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளது. 

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனோ அல்லது மக்கள் அபிப்பிராயத்தினூடாகவோ நிறைவேற்றும் அவசியம் இல்லை எனவும், பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றுவது போதுமானது எனவும் உத்தரவிடுமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜமீர் மனு மீதான பரிசீலனையின் போது தெரிவித்தார். 

இந்த சட்டமூலத்தில் அரசியலமைப்பிற்கு முரணாக எவ்வித சரத்துக்களும் உள்ளடக்கப்படவில்லை. தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் அரசாங்கத்தினால் இந்த திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த கோரிக்கையை முன்வைத்தார். 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.