தெற்கு அதிவேக வீதியின் ஒரு சில இடங்களில் பயணிக்கும் போது, வாகனங்களில் அதிர்வுகள் ஏற்படுவதை பெரும்பாலான சாரதிகள் உணர்ந்திருப்பார்கள் என பெயர் குறிப்பிட விரும்பாத சாரதி ஒருவர் தெரிவித்தார்,

அவர் மேலும் குறிப்பிடுகையில்……..

குறிப்பாக தெற்கு அதிவேக வீதியின் கெரவலபிட்டிய முதல் கடவத்தை வரையான பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் பயணிக்கும் சாரதிகளுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

வாகனம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், திடீரென சக்கரங்களில் அதிர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும் என இந்த அனுபவத்தை எதிர்கொண்ட சாரதியான பிரசாத், தெரிவிக்கும் போது, வாகனத்தில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே பயணித்த லொறியொன்றை முந்தி செல்ல முயற்சித்தேன்.

அப்போது எனது காரின் சக்கரங்கள் அதிர ஆரம்பித்தன. திடீரென அச்சம் கொண்டு, வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன். பின்னர், கடவத்தை வெளியேறும் பகுதி ஊடாக வெளியில் சென்று, வாகனம் திருத்தும் இடத்தில் காண்பித்தேன். வாகன திருத்தும் இடத்திலுள்ளவர்கள் அச்சப்பட வேண்டாம்.

பலருக்கு இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகின்றன. அந்த இடத்தில் ஏதோ இருக்கின்றது என கூறினார்கள்” என அந்த சாரதி குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் மற்றுமொரு சாரதியான சமிந்த, தெரிவிக்கும் போது, கெரவலபிட்டிய பகுதிக்கு அருகில் பயணிக்கும் வாகனங்கள் திடீரென அதிர ஆரம்பிக்கும்.

எனக்கும் அந்த அனுபவம் உள்ளது. அந்த இடத்தில் பேய் இருக்கின்றது போல” என அவர் குறப்பிட்டார். அதிவேக வீதி பராமரிப்பு அதிகாரிகளின் பதில் இந்த விடயம் தொடர்பில் தெற்கு அதிவேக வீதியின் நடவடிக்கை பிரிவின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில் கெரவலபிட்டிய முதல் கடவத்தை வரையான அதிவேக வீதியில் விபத்துக்களை குறைப்பதற்கான புதிய தொழில்நுட்பமொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செனிக் நெப் அலர்ட் பெட்டன் (Sonic Nap Alert Pattern) என்றழைக்கப்படும் தொழில்நுட்பமே இந்த பகுதியில் தற்போது பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த தொழில்நுட்பம் முதல் முதலில் பென்சில்வேனியா நாட்டில் 1987ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காணப்படும் நாடுகளில் வீதிக்கு கீழ் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இலங்கை போன்ற நாடுகளில் பராமரிப்பை குறைப்பதற்காக உயர்த்தப்பட்ட வகையான வீதிக்கு மேல் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் காரணமாக 70 வீதமான விபத்துக்களை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். குறிப்பாக வாகனம் செலுத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சாரதிக்கு நித்திரை ஏற்படுமாக இருந்தால், வாகனம் விபத்துக்குள்ளாவதற்கான சாத்தியம் அதிகம் என அவர் கூறுகின்றார்.

எனினும், இந்த தொழில்நுட்பம் காணப்படுகின்றமையினால், வாகனம் வீதியை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில், வாகனத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிடுகின்றார். வீதியின் இரு பக்கத்திலும் உள்ள வெள்ளை கோடுகளிலேயே இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு ஏற்படும் அதிர்வுகள் காரணமாக, நித்திரையிலுள்ள சாரதி, திடீரென எழுந்து, வாகனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த தொழில்நுட்பம் காரணமாக ஏற்படும் அதிர்வுகள், இலங்கையிலுள்ள சாரதிகளுக்கு புதியது என்பதனால், முதலில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறிய அவர், காலம் செல்ல செல்ல அது பழக்கமாகி விடும் என குறிப்பிட்டார்.

தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப முறைமை, சிறந்த பெறுபேறுகளை வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை அதிவேக வீதியின் அனைத்து இடங்களிலும் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெற்கு அதிவேக வீதியின் நடவடிக்கை பிரிவின் அதிகாரி நம்பிக்கை வெளியிட்டார்