'பிலவ' தமிழ்- சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில், யாழ் மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு, கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனவென வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர், ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'புத்தாண்டு விடுமுறைக் காலப்பகுதியில், சகல திரையரங்குகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரத்தியேக கல்வி நிறுவனங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளன' என்றார்.
வார இறுதி நாள்களான கடந்த 2 நாள்களில் மட்டும், யாழ். மாவட்டத்தில் 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படுமென்ற அச்சத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களில் 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மார்ச் மாதம் 24ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் பாடசாலைகள், பொது வர்த்தக சந்தைகள் என்பன ஒரு வாரத்துக்கு மூடப்பட்டன.
எனினும், மூடப்பட்டிருந்த பொது வர்த்தகச் சந்தை மற்றும் பொது பஸ் தரிப்பிடம் என்பவற்றை திறப்பதற்கு சுகாதார அதிகாரிகள் இந்த மாதம் 8ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தில், யாழ். மாவட்ட மக்கள் முழுமையாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வர்த்தக நிலையங்களுக்குச் செல்லுமாறும் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.