இலங்கையில் 2019-ம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2019, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக 269 பேர் கொல்லப்பட்ட கொழும்பு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி அட்மிரல் சரத் வீரசேகர செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 9 பேர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்ளூர் மதகுரு நௌபர் மௌல்வி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு அஜ்புல் அக்பார் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.
மேலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் மனைவியான சாரா ஜாஸ்மீன் உயிருடன் இருந்தால் அவரை இண்டர்போல், இந்தியா உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.