மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (5) இடம் பெற உள்ள நிலையில் அன்றைய தினத்தை துக்க நாளாக அனுஸ்ரிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துக்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மறைந்த மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர் வரும் திங்கட்கிழமை (5) இடம் பெறவுள்ளது. 

அன்றைய தினத்தை துக்க நாளாக அனுஸ்ரிக்குமாறு பல்வேறு தரப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கு அமைவாக மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் சேவைகளும் அன்றைய தினம் இடம் பெறாது. 

வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் இருந்தும் மன்னாரிற்கான தனியார் சேவைகள் அன்றைய தினம் இடம் பெறாது. 

மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பிரதி நிதிகளும் ஆயரின் துயரில் பங்கு கொள்வதோடு, முழுமையாக துக்க நாளை அனுஸ்ரிப்போம். 

அன்றைய தினம் இறுதி அஞ்சலிக்காக வருகின்ற மக்கள் மீண்டும் திரும்பி செல்ல தேவை ஏற்படின் விசேட போக்கு வரத்துச் சேவைகள் எம்மால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். என மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் மேலும் தெரிவித்தார்.