சென்னை திருவொற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள தூண்டில் வளைவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. அதைப்பார்க்க அப்பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உயிருக்குப் போராடி கொண்டிருந்த திமிங்கலத்தை மீனவர்கள், பைபர் படகு மூலம் கரையில் இருந்து இழுத்து சென்று நடுக்கடலில் விட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 டன் எடை கொண்ட அந்த திமிங்கலம் மீண்டும் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. மீனவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது அந்த திமிங்கலம் துடிதுடித்து இறந்து போனது.
பின்னர், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் இறந்து போன திமிங்கலத்தை மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் இழுத்து வந்து கடற்கரையில் 6 அடிக்கு பள்ளம் தோண்டி புதைத்தனர்.