தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. தற்போது 9 முதல் 12-ம் வரையிலான வகுப்புகள் மட்டும் நடக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே 1 மாணவிக்கு கொரோனா உறுதியானதால் பள்ளியில் படிக்கும் 1200 மாணவிகள், 35 ஆசிரியைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 56 மாணவிகள், 1 ஆசிரியைக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட 57 மாணவிகள், 1 ஆசிரியை ஆகியோர் தஞ்சை, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகள் வசிக்கும் அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 24 கிராமங்களில் மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் என 370 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது. அதன் முடிவில் மேலும் யாரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்களா? என்பது பற்றிய விவரம் தெரியவரும். தற்போது 57 மாணவிகள், 1 ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோர் 5 பேர் என இதுவரை 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அம்மாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். ஏற்கனவே பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டு விட்டது. 2 வாரத்துக்கு பிறகு நிலைமையை கண்காணித்து திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் ஆசிரியர், ஆய்வக பெண் உதவியாளர் ஆகிய 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பற்றிய விவரம் வருமாறு:-
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேப்போல் மதுக்கூர் அருகே உள்ள ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைபார்க்கும் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.
தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் அச்சம் அடைந்துள்ளனர்.