செக் குடியரசு நிலக்கரி சுரங்க பிராந்தியத்தில், புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் அதிகரிப்பு, கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சர் ஆடம் வோஜ்டெக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அதிகரிப்பு தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில், இது விரைவில் குறைக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ஆடம் வோஜ்டெக் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அனைவரும் (பாதிக்கப்பட்டவர்கள்) ஒரு தனிமைப்படுத்தல் விதிகளை கடைப்பிடிப்பார்கள். வைரஸ் தொற்றுகளில் மற்றொரு வீழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புகளுக்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த பின்னர், செக் குடியரசின் பெரிய சுரங்க நிறுவனமான ஓ.கே.டி, கடந்த வாரம் நாட்டின் கிழக்கில், போலந்து எல்லையில் உள்ள கார்வினா பகுதியில் தனது சுரங்கங்களை மூடியது.

இந்த உயர்வு ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஸ்லோவேனியா போன்ற வேறு சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், செக் குடியரசை தங்கள் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இது வழிவகுத்தது.

செக் குடியரசில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 12 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.