தீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவியபடி உள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது.
மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையிலும் 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் ‘மால்’ உள்ளது. நேற்று இரவு 12.30 மணிக்கு அந்த மால் பகுதியில் திடீரென தீ பற்றிக் கொண்டது. அது மேல் தளங்களில் உள்ள மருத்துவமனைக்கும் பரவியது.
மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. தீ பரவியதும் அந்த கருவிகளில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் பந்தூப் பகுதிக்கு விரைந்தன. சுமார் 22 தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கொரோனா நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியும் நடைபெற்றது. 70 கொரோனா நோயாளிகள் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மும்பையில் உள்ள வேறு இரு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றொரு புறம் தீயை அணைக்க கடும் போராட்டம் நடைபெற்றது.
சுமார் 10 நோயாளிகள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மாலில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
தீ விபத்து குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பை மேயர் கிஷோரி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அவர் கூறுகையில், ‘மாலில் ஆஸ்பத்திரி அமைத்து இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.
5 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் மால் உள்ளது. 3, 4-வது மாடிகளில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருந்தது. தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.