ஸ்காட்லாந்தில் பள்ளிக்குச் சென்ற பதின்ம வயது மாணவிகள் இருவர் இரவாகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் பொலிசாருக்கு தகவலளித்தனர்.
பள்ளிக்குச் சென்றிருந்த Amy Greenan (12) என்ற மாணவியும், அவளது தோழியும் இரவாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
பிள்ளைகளின் மொபைல்கள் செயலிழந்திருக்க, பயந்துபோய் பொலிசாருக்கு தகவலளித்த பின்னரும், தூக்கம் கூட வராததால், இரவெல்லாம் அந்த தாய்மார்கள் காரை எடுத்துக்கொண்டு அந்த மாணவிகள் வழக்கமாக செல்லக்கூடிய இடங்களுக்கு எல்லாம் சென்று தேடியுள்ளார்கள்.
இதற்கிடையில் நடந்தது என்னவென்றால், Amyயும் அவளது தோழியும் Glasgow என்ற இடத்துக்கு சென்றுள்ளார்கள்.
ரயிலில் பயணித்த அவர்கள் இருவரும் அயர்ந்து தூங்கிவிட, ரயில் இறுதியாக நிறுத்தப்படும் இடத்துக்கு சென்றுள்ளது. ரயிலின் விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட, வெகு நேரத்திற்குப் பின் கண்விழித்த அந்த மாணவிகளுக்கு தாங்கள் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டது புரிந்துள்ளது.
பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வதென தெரியாமல், பசியிலும் குளிரிலும் இரவைக் கழித்த அந்த இருவரும், காலையில் ஜன்னலை உடைக்கலாம் என முடிவு செய்து ஜன்னலை உடைக்கும் முயற்சியில் இறங்கும்போது, அங்கு ஒரு பெண் வந்திருக்கிறார். அவரது கவனத்தை அவர்கள் ஈர்க்க, அந்த பெண் தான் உதவுவதாக கூறி விட்டு, இரயில்வே அதிகாரிகளை அழைத்துள்ளார்.
அவர்கள் ரயிலின் கதவுகளைத் திறந்து மாணவிகளை மீட்டுள்ளனர். பசியிலிருந்த மாணவிகளுக்கு யாரோ ஒருவர் உணவும் தண்ணீரும் வாங்கிக்கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் இரவெல்லாம் தூக்கமில்லாமல் தெருத்தெருவாக பிள்ளைகளை தேடிக்கொண்டிருந்த பெற்றோருக்கு, அவர்களது மகள்கள் கிடைத்துவிட்ட தகவலைச் சொல்லியிருக்கிறார்கள் பொலிசார்.
பிரித்தானியாவில் தொடர்ந்து இளம்பெண்கள் மாயாமாகும், துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், இந்த மாணவிகள் பத்திரமாக கிடைத்த செய்தி பெரும் ஆறுதலையளித்துள்ளது.