பெயரில் ஐஸ் கொண்ட நாட்டின் தலைநகருக்கு அருகே தீப்பிழம்பு சீறிப்பாய்கிறது.

ஆம். ஐஸ்லாந்துதான் அந்த நாடு. இந்நாட்டின் தலைநகர் பெயர் ரேக்யூவீக். இந்நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளது என்கிறது அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம்.

ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள இந்த ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் (Fagradalsfjall) எரிமலை வாயின் பிளவு 500 முதல் 700 மீட்டர் நீளமுள்ளது என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த எரிமலை வெடிக்கிறது.

இது தவிர, ஐஸ்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.