மதுரை கோச்சடை 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. பூக்கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. எனவே ராஜேஸ்வரி ஆரப்பாளையத்தில் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். ராஜேஸ்வரி நடத்தையில் சுப்பையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று இரவும் அவர்களுக்குள் மீண்டும் சண்டை உருவானது. அப்போது ‘உன்னுடன் இனிமேல் வாழ முடியாது’ என்று கூறிவிட்டு, ராஜேஸ்வரி வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பையா வீட்டு வாசலில் ராஜேஸ்வரியை தடுத்து நிறுத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் ராஜேஸ்வரிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் சுப்பையாவை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து கூறியதாவது:-

எனக்கும் ராஜேஸ்வரிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் கோச்சடை வீட்டில் 2 மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தோம்.

எனக்கு போதிய வருமானம் இல்லாததால் ‘நான் வீட்டு வேலைக்கு போகிறேன்’ என்று ராஜேஸ்வரி கூறினார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டேன்.

ராஜேஸ்வரி ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்தார். அங்கு வசித்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ராஜேஸ்வரி அந்த நபருடன் உல்லாசமாக ஊர் சுற்றுவதாக எனக்கு தகவல் வந்தது.

இதுபற்றி நான் என் மனைவியிடம் கேட்டேன். ஆனால் ராஜேஸ்வரி மறுத்தார். ஆனாலும் எனது மனைவி பற்றி பல்வேறு இடங்களில் இருந்து அரசல் புரசலாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

நேற்று இரவு நான் அவளிடம் ‘உனக்கு கள்ளக்காதல் இருப்பதாக தெரு முழுவதும் பேச்சு உள்ளது. இதனால் எனக்கு அவமானமாக உள்ளது’ என்று கண்டித்தேன். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

‘என்னை 24 மணி நேரமும் சந்தேக கண்ணுடன் பார்க்கும் உன்னுடன் நான் இனிமேலும் குடும்பம் நடத்த விரும்பவில்லை. நான் பழைய விளாங்குடியில் இருக்கும் என் தம்பி பாலமுருகன் வீட்டுக்கு போகிறேன். நீ இனிமேல் எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி வீட்டை விட்டு புறப்பட்டாள்.

இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. உடனே நான் ராஜேஸ்வரியை வீட்டு வாசலில் தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டி கொன்றேன்”

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.