நாகை வேதநாயகம் செட்டித்தெருவை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது34). டிரைவர். இவருடைய மனைவி தனவள்ளி (27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த விஜயபாஸ்கரன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது மனைவி தனவள்ளி மீது ஊற்றி தீ வைத்தார்.

 

இதில் தனவள்ளியின் உடல் முழுவதும் தீ பரவி அவர் அலறி துடித்தார். தீயில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விஜயபாஸ்கரனை கைது செய்தனர். குடும்ப தகராறில் டிரைவர் ஒருவர் மனைவியை எரித்துக்கொல்ல முயன்றது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.