சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலை கற்கை நெறிக்குள் உள்வாங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை வகுப்பதற்கு பாராளுமன்ற உப தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் கூடிய அந்த அமைச்சின் ஒன்றிணைந்த ஆலோசனை தெரிவுக்குழு விசேட கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. 

இந்த துணைக்குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சிவஞானம் ஸ்ரீதரன், வீரசுமன வீரசிங்க, சாகர காரியவசம், அமரகீர்த்தி அத்துக்கோரல, தயா கமகே, மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய ஆகிய எட்டு பேரை கொண்டதாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இதன் செயலாளராக பாராளுமன்ற துணை செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜெயதிலக்க செயற்படுகின்றார். 

இங்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலிசப்ரி சட்டம் தொடர்பில் பொது மக்கள் கொண்டுள்ள அறிவு மிகவும் குறைவான மட்டத்தில் இருப்பதினால் சட்டம் தொடர்பிலான அடிப்படை தெளிவை நாட்டு மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என்று கூறினார். 

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அடிப்படை சட்டம் தொடர்பில் பிரஜைகளுக்கு கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டம் தொடர்பிலான அறிவை பாடசாலை கற்கை நெறிக்குள் ஒன்றிணைப்பது காலத்தின் தேவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

சட்டம் தொடர்பான பாடத்தை பாடசாலை கற்கை நெறியுடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அடிப்படை குழுவின் சிபாரிசினை உள்ளடக்கிய அறிக்கை 2 மாத காலத்துக்குள் வழங்குமாறு கல்வி அமைச்சர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

இந்த விசேட குழுவின் சிபாரிசுக்கு அமைய சட்டம் குறித்த பாடத்தை பாடசாலை கற்கை நெறிக்குள் விரைவாக உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.