கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தமை தொடர்பில் உரிய நீதி வழங்கப்படாமையைக் கண்டித்து, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வட்டக்கச்சி சந்தியில் இன்று காலை ஆரம்பித்த குறித்த கண்டன ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் பொதுமக்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்த நபருக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை எனவும், தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவில்லை எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி மற்றும் சகோதரிகள் ஆகியோர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மதுபான விற்பனை, மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துமாறும், உயிரிழந்தவருக்கு நீதி வழங்குமாறும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினருக்கான மகஜரும் இதன்போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.