மியன்மாரில் அதிகரித்து வரும் இராணுவ வன்முறைகளால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.
இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என குற்றம்சாட்டி வந்த அந்த நாட்டு இராணுவம் கடந்த மாதம் முதலாம் திகதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் இராணுவம் கைது செய்து வீட்டுக்க காவலில் வைத்துள்ளது.
இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் வீட்டுக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அதேவேளையி இராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதை இராணுவம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, மியன்மாரின் முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் நேற்று போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் யாங்கூன் நகரங்களில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மியன்மாரில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பெபர்வரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் இதுவரையில் குறைந்தது 134 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.