கொவிட் தடுப்பு எஸ்ட்ரா செனகா தடுப்பூசியை செலுத்துவதற்காக 1000 ரூபாவினை இலஞ்சமாக பெற்ற போது மருதானை பொலிஸ் அதிகாரிகளால் நபரொருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் 40 வயதுடைய அலுவலக உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மருதானை பொலிஸ் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதானை கொவிட் தடுப்பு எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்படும் இடத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்காக 1000 ரூபாய் இலஞ்சம் பெறும் போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.