இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 500ஐ அண்மிக்கிறது.

அதன்படி நாட்டில் மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 483ஆக அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு 15, கொழும்பு 5, பிலியந்தலை, பிலிமதலாவை, கொழும்பு 2, கலேவலை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

87, 63, 78 மற்றும் 89 வயதுடைய பெண்களும் 73 மற்றும் 63 வயதுடைய ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொவிட் 19 நிமோனியா, சிறுநீரக தொற்று, உயர் குருதி அழுத்தம், தீவிர நீரிழிவு, சுவாச தொகுதி செயலிழந்தமை, நிமோனியா நுரையீரல் புற்று நோய் என்பன இவர்களது மரணங்களுக்கான காரணமாகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில்  80 ஆயிரத்து 20 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 367 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.