அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டய படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி ஏ.டி.ஏம்.மில் பணம் எடுப்பதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்தார். விடுதிக்கு அருகே உள்ள மருத்துவ குடியிருப்பு எதிரில் மாணவி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் மாணவியை ஆபாசமாக திட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி வலிதாங்க முடியாமல் அலறிதுடித்தார்.
சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர் போலீசாருக்கு பயந்து அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சைபெறும் மாணவி மற்றும் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளூர்படை கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ்சேவியர் (30) என்பதும், இவர் ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் சில ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அப்போது அந்த மாணவி இந்த பள்ளியில் படித்து வந்தார். அப்போது அந்த மாணவியை பிரான்சிஸ்சேவியர் ஒருதலையாக காதலித்து வந்தார். தற்போது அந்த மாணவி பல்கலைக்கழகத்தில் வேறு ஒருவருடன் பேசி பழகுவதாக பிரான்சிஸ்சேவியருக்கு தகவல் கிடைத்தது. அந்த மாணவி தன்னைவிட்டுவிட்டு கல்லூரியில் உள்ள ஒரு இளைஞரை காதலிப்பதாக அவர் நினைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிரான்சிஸ்சேவியர் மற்றும் மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்ற பிரான்சிஸ்சேவியர் மீது போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.