ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில், 2014இல் ஒரு மூத்த நீதவான் ஊடாக சட்டவிரோதமாக இதுகுறித்த விசாரணைத் தகவல்களைப் பெற முயன்றார் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  இது தொடர்பாக நீதிபதிக்கு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக சார்க்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 நாட்கள் விசாரணையின்போது தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுத்திருந்தார்.

எனினும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 66 வயதான சார்க்கோசி, பிரான்சின் தற்கால வரலாற்றில் சிறைத்தண்டனை பெற்றுள்ள  முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.