கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் உள்ள ஜெய்சக்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் முத்தமிழரசு (வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று மாணவன் தனது அத்தை வீட்டிற்கு செல்வதாக கூறி உள்ளான். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த முத்தமிழரசு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், அங்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொைல செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகரசம்பட்டி கந்தசாமி தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 63). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் தணிகாசலம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.