அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த மாதம் 20-ந் தேதி துணை அதிபராக பதவியேற்று கொண்டார்.
அவர் தனது துணை அதிபருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிசின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ். இவர் பெண்களுக்கான ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவர் கமலா ஹாரிசின் பெயர் மற்றும் புகைப் படங்களை பயன்படுத்தி தனது நிறுவனத்தின் பொருட்களை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
‘வைஸ்-பிரெசிடென்ட் ஆண்டி’ என்ற ஆங்கில வாசகங்களுடன் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்வெட் சர்ட்கள் அதிகம் விற்பனையானது.
இது தொடர்பாக புகார்கள் வெள்ளை மாளிகைக்கு வந்தன. இதையடுத்து மீனா ஹாரிசுக்கு வெள்ளை மாளிகையின் சட்டக்குழு, அறிவுரை வழங்கி உள்ளது அதில், வெள்ளை மாளிகையின் கொள்கைப்படி துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களின் வணிகத்தையோ, சமூக வலைத்தளம் பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் மிக உயர்ந்த நெறிமுறைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.
மீனா ஹாரிஸ் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாகவும் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகள் துணை அதிபரின் ஆதரவு பெற்றவை என்ற முன் முடிவுக்கு பார்வையாளர்கள் வந்துவிடக்கூடும் என்பதால் சமூக வலைதளங்களில் கருத்துகளை கவனமாய் பதிவிடுமாறு மீனா ஹாரிசுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.