தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், வார்டு பாய் உள்ளிட்ட 3 பேருக்கு (2 பெண்கள், 1 ஆண்) முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது திடீரென அந்த 3 பேரும் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் அவர்களுக்கு உடனடியாக அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் 3 பேரும் மயக்கம் தெளிந்தனர். தொடர்ந்து அவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருததுரை கூறும்போது:-

தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேரும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தனர். மற்றப்படி கொரோனா தடுப்பூசி போட்டதால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.