சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட மாநிலங்களில் இருந்து தினசரி 55 லாரிகள் மூலம் சின்ன வெங்காயம் வரத்து இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் திருச்சி, பெரம்பலூர் உள்பட மாவட்டங்களில் இருந்து தினசரி 70 டன் சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.


இந்தநிலையில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை உயர தொடங்கி உள்ளது.

சென்னையில் கடந்த வாரம் சில்லரை விலையில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது ரூ.90 முதல் ரூ.110 வரையில் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பல்லாரி என்று அழைக்கப்படும் பெரிய வெங்காயத்தின் விலையிலும் உயர்வு காணப்படுகிறது. ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரையில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.46 ஆக விலை (தரத்துக்கு ஏற்ப) அதிகரித்துள்ளது.

சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலையேற்றம் இல்லத்தரசிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:-

(ஒரு கிலோ எடை, தரத்துக்கு ஏற்ப)உருளை கிழங்கு ரூ.15 முதல் ரூ.18 வரை, ஊட்டி கேரட் ரூ.23 முதல் ரூ.25 வரை, பெங்களூரு கேரட் ரூ.14 முதல் ரூ.16 வரை, பீன்ஸ் ரூ.50, பீட்ரூட் ரூ.16, சவ்சவ் ரூ.16, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20 வரை, முட்டைகோஸ் ரூ.8, வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.50 வரை, கத்திரிக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை, பாகற்காய் ரூ.24 முதல் ரூ.30 வரை, புடலங்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை, முருங்கைக்காய் ரூ.90.