ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக அந்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பிரபலமான நபர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றிவரும் 2 பெண் நீதிபதிகள் ஒரே காரில் நேற்று நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பெண் நீதிபதிகள் சென்ற காரை இடைமறித்த பயங்கரவாதி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர தாக்குதலில் காரில் இருந்த 2 பெண் நீதிபதிகளும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் டிரைவர் படுகாயமடைந்தார்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அந்த இடத்தைவிட்டு உடனடியாக தப்பிச்சென்றுவிட்டான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த கார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 2 பெண் நீதிபதிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என ஆப்கானிஸ்தான் அரசு குற்றம்சுமத்தியுள்ளது. தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என அமெரிக்கா மற்றும் ஆப்கான் அரசுகள் குற்றம்சுமத்தி வருகின்றன.