பார்ன் படங்களில் நடிப்பவர்களும் நடிகர்கள்தான்... அதைத் தாண்டினால் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் மட்டுமே என்ற உண்மையை மீண்டும் வலிமையாக நிறுவியிருக்கிறார் மியா கலிஃபா. அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியே அதன் காரணம்.
'மியா கலிஃபா'... அறிமுகம் தேவையற்ற பெயர். யாருக்கும் புலப்படாத, கூகுள் மட்டுமே அறிந்த இன்காக்னிட்டோ சாளரத்தில் அதிகமாகத் தேடப்பட்ட பெயர். பல ஆண்களின் உறங்காத இரவுகளைச் சொந்தம் கொண்டாடும் பெயர். இணையத்தின் பயன்பாட்டில் ஒரு தாராளமான பகுதியைத் தனக்கென ஆக்கிக்கொண்ட பெயர்.
மியா கலிஃபா
இப்படியெல்லாம் இந்தப் பெயர்மீது உவமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனை பரவலாக அறியப்பட்ட பெயரைப் பற்றி, வெவ்வேறு வகையான மனிதர்கள் அடர்ந்த ஒரு சாலையில், யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு கேட்டுப் பாருங்கள். 'அப்படியா? யார் அது' என ஒரு கள்ளச் சிரிப்புடன் கேட்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு உண்மையாகவே மியாவைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், தெரிந்திருந்தாலும் அதே பதிலைத்தான் நீங்கள் எதிர்பார்க்கமுடியும். ஆபாசப்பட நடிகர்களுக்கு ஏனோ அத்தகைய ஒரு கள்ளச்சிரிப்பு பதிலே அங்கீகாரமாகிவிட்டது.
'அந்த மாதிரிப் படங்களை'ப் பார்ப்பது சரியா தவறா என்பது இங்கே விவாதமல்ல. ஆனால், பார்ன் படங்களில் நடிப்பவர்களும் நடிகர்கள்தான்... அதைத் தாண்டினால் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் மட்டுமே என்ற உண்மையை மீண்டும் வலிமையாக நிறுவியிருக்கிறார் மியா கலிஃபா. அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியே அதன் காரணம். மியா அப்படி என்னதான் சொல்லிவிட்டார், அந்தப் பேட்டியில்?
மியா கலிஃபா
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பார்ன் சைட்டுகளில் தரவரிசைபடுத்தப்படும் பார்ன் ஸ்டார்களில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார் மியா. ஆனால் அவரோ, "நான் பார்ன் குறும்படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ரேங்கிங்கில் இருக்கிறேன்", என்கிறார். இத்தனை புகழைச் சுமந்து ஆபாசப் பட உலகின் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தும் இதுவரை பார்ன் ஃபிலிம்களில் நடித்து மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே வருவாய் ஈட்டியிருக்கிறார் மியா. ரொம்ப பெரிய அமௌன்ட் என்று நினைக்க வேண்டாம். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் மட்டுமே!
’’அந்தத் துறையில் பெண்களைச் சட்டபூர்வமாக ஒப்பந்தம்செய்து சிக்கவைப்பார்கள். ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவையை அறிந்துகொண்டு இப்படிப்பட்ட குறைவான சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்’’ என்ற மியா "நான் ஒன்றும் பார்ன் ஸ்டாராக இருந்து புகழ்பெற்றதற்காக பெருமைகொள்ளவில்லை. பொருளாதார நிலை அப்படியாக்கிவிட்டது" என்கிறார்.
Mia Khalifa
Instagram/Mia Khalifa
முதன்முதலாக ஆபாசப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானபோது தன் நண்பர்கள் யாருக்கும் அது தெரிந்துவிடக் கூடாது என்ற பதற்றத்திலேயே நடித்துள்ளார். "ஆனால், என் நண்பர்கள் என்னுடைய வீடியோவைப் பார்த்துவிட்டனர். தங்களுக்குள் அதை ஃபார்வேர்டும் செய்துகொண்டனர்," என, அப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பது தப்பில்லை, நடிப்பது தப்பென்ற சமூகத்தின் ஒருமனதான முடிவுக்குப் பலியான அனுபவத்தைக் கூறியுள்ளார்.
வாழ்க்கையின் சூழல் மியாவை அதோடு விட்டுவிடவில்லை. "அந்தச் சமயத்தில்தான் அடுத்த வீடியோ வெளியானது. இதுவரை வெளியான என் வீடியோக்களிலேயே மிகவும் வைரலான, நான் புர்க்காவில் தோன்றிய வீடியோ." இம்முறை அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு மியாவை துன்புறுத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம். "ஒப்பந்தமாகிவிட்டேன். இன்னமும் ஒருவாரத்தில் படப்பிடிப்பு இருக்கிறது. இனி பின்வாங்கமுடியாது என்பதால் நடித்தேன்," ஆனால் விளைவோ கொலை மிரட்டலாக இருந்தது.
Mia Khalifa
முழு உடலையும் உடையால் மறைத்து நடிக்கும் நடிகைகளையே எல்லோரும் சமூக வலைதளங்களில் சாடும் யுகத்தில், மியா கலிஃபா எதிர்கொண்ட விமர்சனங்கள், மிரட்டல்கள், அவமானங்களை யோசித்துக்கூட பார்க்கமுடியாது. "என் தலையைத் தனியாக வெட்டியதுபோல் போட்டோஷாப் செய்யப்பட்ட ஒரு படத்தை எனக்கு அனுப்பி, 'அடுத்து நீதான்' எனக் கொலை மிரட்டல் விடுத்தனர்," என்கிறார் இன்றும் அந்த பயத்தின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத மியா. தன்னுடைய வீட்டை கூகுள் மேப்பில் குறிப்பிட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் அந்தப் படத்துடன் அனுப்பியதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளார்.
கொலைமிரட்டலின் உச்சக்கட்டத்தைப் பார்த்தபின் மியாவுக்கு மற்றதெல்லாம் தூசி தட்டுவிடுவதாகிவிட்டது. "இப்போதெல்லாம் யாராவது என்னை ட்ரோல் செய்தாலோ, கொச்சைபடுத்தினாலோ, என் அடுத்த கேள்வி நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸா? என்பதுதான். அவர்களையே பார்த்துவிட்டேன். நீயெல்லாம் எம்மாத்திரம்," எனக் கடந்துவிடுவதாகச் சொல்கிறார்.
Mia Khalifa
YouTube Screenshot
"என் அடல்ட் படங்களைப் பார்த்து என்னை ரசித்தவர்களால், கடந்தகாலத்தில், ஏற்றுக்கொள்ளல், பெருமை என்ற இரண்டுமே என் வாழ்வில் இருந்தன. ஆனால், இன்று அவையிரண்டுமே இல்லை. கெட்ட பெயர் மட்டுமே இருக்கிறது. என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது என் நோக்கமாக இருக்கிறது. அதற்காகவே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி பெருமை எனக்குத் தேவையில்லை. என்னைச் சிறுமைப்படுத்தி பேசியவர்களை பதிலுக்குச் சிறுமைப்படுத்தியிருக்கவேண்டும். அப்படித்தான் என் கடந்த காலம் இருந்திருக்கவேண்டும்," என ஒருவித நம்பிக்கையின்மையோடு பேசுகிறார்.
மியா கலிஃபாவை அன்று சுற்றிநின்று சாடியவர்களும் சரி, இன்று ட்விட்டர், முகநூல் என சமூகவலைதளங்களில் இழிவுபடுத்துகிறவர்களும் சரி, எல்லோருமே பெரும்பாலும் மியாவின் வீடியோவைப் பார்த்தவர்களாகத்தான் இருக்கின்றனர். தன் நிர்வாணப் படங்களைக் கண்டவர்கள், தன் அந்தரங்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள், தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பதே மியாவின் வருத்தமாக இருக்கிறது.
நீங்கள் எத்தனையோ மியா கலிஃபா வீடியோக்களைப் பார்த்திருக்கலாம்; பார்க்காமலும் இருந்திருக்கலாம். ஆனால், கண்டிப்பாக இந்த நேர்காணல் வீடியோவைப் பாருங்கள். எழுதப்படாத விதிகளை வைத்துக்கொண்டு, தனக்குத் தேவையானதை மட்டுமே சட்டமாக்கிக்கொண்ட சமூகத்தின் பிடியில் சிக்கி, இன்னமும் இழிவைச் சந்தித்துக்கொண்டிக்கும் ஒரு பெண்ணின் ஆழ்மனம் பேசும் சத்தம், உங்களுக்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது. உண்மையில், 12,000 டாலர்களுக்கு மியாவை ஒப்பந்தம் செய்ததைவிட, மிகவும் கொடுமையானது இது.