வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 5 பேர் மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வாரம் கொரோனா நோயால் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 667 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 6 பேர் மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முசலியில் கடந்த வாரம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவருடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் ஒருவர் வெளிமாவட்டதிலிருந்து வருகை தந்து முசலியில் தங்கியிருந்து மீன்வாடியில் தொழில் செய்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வைத்தியாலையில் சேர்க்கபட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.