கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 21). இவர் ரேஸ்கோர்சில் ஒரு உள்ள தனியார் காபி கடையில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது உறவினர் பெண்ணான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. உறவினர்கள் என்பதால் 2 பேரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விரைவில் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அந்த கல்லூரி மாணவி செல்வபுரம் தில்லை நகரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்து இருந்தார். அங்கு சென்ற விஷ்ணு தனது உறவினர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவியை தனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அப்போது கல்லூரி மாணவி தனக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், தான் சினிமாவில் நடிக்க போவதாகவும் கூறினார்.
இது விஷ்ணுவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியின் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக கல்லூரி மாணவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிய விஷ்ணுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.