கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் தியாகு. எலெக்ட்ரீசியன். இவருக்கு ராமகுரு (வயது 15), ஸ்ரீ சங்கர் (9) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் ஸ்ரீ சங்கர் அங்குள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்

 

இந்த நிலையில் ராமகுரு, ஸ்ரீ சங்கர் மற்றும் நண்பர்கள் 4 பேர் அந்தப்பகுதியில் உள்ள கல்லுக்குழியில் குளிக்க சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இந்த கல்லுக்குழியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

தண்ணீரை பார்த்ததும் 4 பேரும் சேர்ந்து உள்ளே இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீ சங்கர் ஆழமான பகுதிக்கு சென்றான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான்.

அதை பார்த்த ராமகுரு மற்றும் நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவன் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான். இதனால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய ஸ்ரீ சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீ சங்கர் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.