இலங்கையில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக வழங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.இ்ந்தியாவைப்போல இலங்கையும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறது. தலைநகர் கொழும்புவில் பல்வேறு ஆஸ்பத்திரிகள் இந்த தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளன.
இதில் முதல் நாளில் 5,286 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அவர்களில் யாருக்கும் இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை சுகாதார மந்திரி பவித்ரா வன்னியராச்சி நன்றி தெரிவித்து உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தியாவின் தடுப்பூசி உதவிக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் நன்றி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.