பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு, குழந்தைகள் வளர்ந்து சிறுமியானதும் ‘அவர்களுக்கு எந்த வயதில் இருந்து பிரா அணிய கற்றுத்தரவேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக அவர்கள் பத்து வயதை அடையும்போது, அம்மாக்கள் அணியும் பிராக்கள் மீது தங்கள் கவனத்தை திருப்புவார்கள். அதோடு பிராக்கள் பற்றி பல்வேறு கேள்விகளையும் எழுப்புவார்கள். அப்படி அவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு மார்பகம் வளரத் தொடங்கிவிட்டது என்பதை தாய்மார்கள் புரிந்துகொள்ளலாம். அப்போது மகளின் கேள்விகளுக்கு தாய் தெள்ளத்தெளிவாக பதிலளிக்கவேண்டும். எரிச்சல்பட்டு அவளது கேள்விகளை திசைதிருப்பும் விதங்களில் நடந்துகொள்ளக்கூடாது.
12, 13 வயதுகளில் பல சிறுமிகள் தங்கள் மார்பக வளர்ச்சி பற்றி குழம்பி, அப்போது என்ன மாதிரியான உடை அணிவது என்று தெரியாமல் பள்ளிக்கு செல்லக்கூட தயங்குவார்கள். அந்த தயக்கம் அவர்களது கல்வியை மட்டுமல்ல, மனோவளர்ச்சியையும் பாதிக்கும். அதனால் மகள்களிடம் எட்டு வயதில் இருந்தே மார்பக வளர்ச்சி பற்றி தாய்மார்கள் பேச ஆரம்பித்துவிடலாம்.
பொதுவாக எட்டுவயதில் தான் மார்பகம் வளரத் தொடங்குகிறது. அப்போதிருந்து அடுத்த ஆறு முதல் எட்டு வருடங்கள் வரை மார்பக வளர்ச்சி இருந்துகொண்டிருக்கும். இந்த காலகட்டத்தில்தான் ‘பிரேசியர்’ என்ற பிரா பெண்களின் உள்ளாடையாகிறது. ‘இப்போதுதானே மார்பக வளர்ச்சி தொடங்குகிறது. அதை நீ கருத்தில்கொள்ளாமல் உன் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிந்துகொள்’ என்று தாய்மார்கள் தங்கள் மகள்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மார்பக வளர்ச்சி தொடங்கும் காலத்தில் இருந்து அதற்கான பிரா அணிய வழிகாட்ட வேண்டும். முதலில் ‘பிகினர்ஸ் பிரா’ அணியவேண்டும்.
பிரா அணியத் தொடங்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு அதிக மனக்குழப்பம் ஏற்படும். அப்போது தோழிகளின் உடலோடு தங்கள் உடலை ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். தோழிகள் முதலிலே பிரா அணியத் தொடங்கிவிட்டால் ‘தனக்கு இன்னும் மார்பகங்கள் வளரவில்லையே. தான் மட்டும் பிரா அணியும் சூழல் உருவாகவில்லையே’ என்று கவலைப்படுவார்கள்.
தோழிகள் அணியும் முன்பே தான் பிரா அணியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ‘அவர்கள் எல்லாம் அணியவில்லை. நான் மட்டும் ஏன் அணியவேண்டும்?’ என்று கேட்பார்கள். அம்மாக்கள்தான் மகள்களின் இத்தகைய குழப்பங்களுக்கு முடிவுகட்டி தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களிடம் தெளிவினை உருவாக்கவேண்டும். அது மட்டுமின்றி, ‘உனது உடல் உறுப்பு பகுதிகளில் ஆடைகளால் மறைக்கப்படும் எந்த பகுதி பற்றி எந்த சந்தேகங்கள் ஏற்பட்டாலும் என்னிடம் கேள். உன் சந்தேகங்களை எல்லாம் எப்போதும் நான் உன் தோழி போன்று தீர்த்துவைப்பேன்’ என்று கூறி மகளுக்கு நம்பிக்கையும் ஊட்டவேண்டும்.
சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தாங்கள் திருமணமாகி தாய்மையடைந்து குழந்தையை பெற்றெடுத்த பின்பு குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என்று நினைக்கிறார்கள். பெரிய மார்பகமாக இருந்தால் தங்கள் குழந்தைகளின் தேவைக்கு அதிக அளவில் பால் சுரக்கும் என்றும் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை. மார்பக அளவிற்கும் பால் சுரப்பிற்கும் தொடர்பு இல்லை.