வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவல் ஒன்று அதன் பயனர்கள் தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது.
ஒருவழியாக தாஜ் ஓட்டலில் ஏழு நாட்களுக்கு இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை பெற்று இருக்கிறேன் என கூறும் தகவல் மற்றும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.
இணைய முகவரியை க்ளிக் செய்ததும், `காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தாஜ் ஓட்டல் சார்பில் 200 பரிசு கூப்பன்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஏழு நாட்கள் எந்த தாஜ் ஓட்டலிலும் இலவசமாக தங்க முடியும். இதற்கு சரியான பரிசு பெட்டியை திறக்க வேண்டும்.' எனும் கூறும் தகவல் அடங்கிய வலைப்பக்கம் திறக்கிறது.
பின் பரிசு கூப்பனை க்ளிக் செய்த பின், பயனர்கள் பரிசை பெற குறுந்தகவலை ஐந்து க்ரூப் அல்லது 20 அக்கவுண்ட்களுக்கு அனுப்ப கோருகிறது. உண்மையில் இது மால்வேர் அடங்கிய வலைதளமாக இருக்கலாம்.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து தாஜ் ஓட்டல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், பயனர்கள் வைரல் தகவலை நம்பி வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ள தகவல் பொய் என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.