வளைகுடா நாடுகளில் துபாய் நகரம் அனைத்து விதமான கலாசாரங்கள் மற்றும் சமூகத்தினருக்கும் ஏற்ற பகுதியாக இருந்து வருகிறது. நேற்று உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், துபாயில் பல்வேறு சுவாரசியங்களுடன் காதலர் தினம் நடந்தது. குறிப்பாக, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் முதல் முறையாக இந்திய வாலிபர் ஒருவர் பெண்ணிடம் காதலை கூற ஏற்பாடு செய்துதரப்பட்டது.
இதில் இந்தியாவை சேர்ந்த சிராக் என்ற வாலிபர் தனது பெண் தோழியான கிருத்திகாவை அழைத்துக்கொண்டு அவரது பிறந்த நாளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக கூறி எக்ஸ்போ 2020 வளாகத்திற்கு அழைத்து வந்தார். ஆனால் அது என்ன என்று அவரிடம் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து வளாகத்திற்குள் வர வர அந்த பெண்ணுக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தது. ஒரு ஊழியர் வந்து அவரிடம் பலூனை அளித்தார். அதன் பிறகு வழி நெடுக பெண்ணின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கையசைத்து அவரை வரவேற்றனர்.
பின்னர், அந்த பெண்ணிடம் முட்டிபோட்டபடி வாலிபர் மோதிரத்தை கொடுத்து ‘என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?’ என கேட்டார். இதனால் திகைத்துப்போய் இன்ப அதிர்ச்சியடைந்த அந்த பெண் சில வினாடிகளுக்கு பிறகு ஆம் என பதிலளித்தார். பிறகு ஆனந்த கண்ணீருடன் பெண்ணுக்கு வாலிபர் மோதிரத்தை அணிவித்தார். பின்னர் இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியானது வீடியோவாக எடுக்கப்பட்டு எக்ஸ்போ 2020 கண்காட்சி அமைப்பு சார்பில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதன் மூலம் எக்ஸ்போ 2020 வளாகத்தில் முதன்முதலாக காதலை பரிமாறிக்கொண்ட இளம்ஜோடிகள் என்ற பெயரை அவர்கள் பெற்றனர்.
The surprise of her life awaited her at Expo 2020. Watch to the end! ❤️💍#Expo2020 #Dubai #UAE pic.twitter.com/RN8Cjr7e2I
— Expo 2020 Dubai (@expo2020dubai) February 13, 2021