சீனாவின் உஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ தொடங்கியது. மேலும் ஒரு வருடமே முடிந்த நிலையிலும், கொரானாவில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை. தற்போது வரை கொரோனா தொற்றுக்கு உலகளவில் 2,100,404 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசி விநியோகம் நடைபெற்று வரும் சூழலில் கொரோனாவிடம் இருந்து விடிவு காலம் கிடைக்காதா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருப்பினும், வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே, சமூக விலகல்,  கை கழுவுதல், முகக்கவசங்களை  அணிதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டன. 

அதிலும் குறிப்பாக முகக்கவசங்கள் அணியாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கை விடுத்தன. இந்தியாவில், முகக்கவசங்கள் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வந்ததும் தெரிந்த விஷயம் தான். மேலும் பல இடங்களில் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக நூதன முறையில் காவல்துறை அதிகாரிகள் தண்டனை வழங்கினர். அதுபோன்று இந்தோனேசியாவில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்த வெளிநாட்டினர் 2 பேருக்கு அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கியுள்ளனர். 

கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் கொரோனா பரவல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கினர். இந்த நிலையில், இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலி எனும் பகுதியில் முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த  வெளிநாட்டினர் 2 பேருக்கு "புஷ்-அப்ஸ்" 50 முறை எடுக்கச்சொல்லி வினோத தண்டனை வழங்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் அந்நாட்டு இணையங்களில் மிகவும் வைரலாக பரவியுள்ளது. அதில் அந்த இரு நபர்களும் ஷார்ட்ஸ் அணிந்தபடி புஷ்-அப்ஸ் எடுக்கும் காட்சிகள் அடங்கியுள்ளன. இது குறித்து பேசிய பாதுகாப்பு அதிகாரி குஸ்டி அகுங் கேதுட் சூர்யானேகர, "சமீபத்திய காலமாக ஏராளமான நபர்கள் முகக்கவசங்கள்  இல்லாமல் எங்களிடம் பிடிபட்டனர். அதில் 70-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து தலா  100,000 ரூபியா அதாவது 7 அமெரிக்க டாலர்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் சுமார் 30 பேர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறினர். 

அவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக புஷ்-அப்ஸ் எடுக்கச் சொல்லி உத்தரவிட்டு வருகிறோம்" எனக்கூறினார். அந்த வகையில் வெளியே வருபவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை என்றால் 50 புஷ்-அப்ஸ்களும், சரியாக அணியாதவர்களுக்கு 15 புஷ்-அப்ஸ்களும் தண்டனையாக வழங்கப்படுகிறது. மேலும், முகக்கவசங்களை அணியாமல் வெளியே வருபவர்கள் கூறும் காரணங்களை அதிகாரி சூர்யானேகர சுட்டிக்காட்டினார். அவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் தங்களுக்கு தெரியாது என்றும், மாஸ்க்கை மறந்து விட்டதாகவும் கூறிவார்களாம். 

அதிலும் சிலர் மாஸ்க் ஈரமாக  இருக்கிறது என்றும், சேதமடைந்துள்ளது என்றும் சாக்குபோக்கு சொல்வார்கள் என கூறினார். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முஸ்லீம் பெரும்பான்மை நாட்டில், மிக சிறிய அளவிலேயே இந்து மதத்தினர் இருக்கும் இந்த பாலி தீவில் வசிக்கும் சில இந்தோனேசியர்களும் இது போன்ற அசாதாரண தண்டனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல முகக்கவசங்கள் அணியத் தவறியதற்காக எந்த வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட்டதாக இதுவரை எந்த அறிக்கையும் இல்லை என்றாலும், வைரஸ் விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினரை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியும் என்றும் பாலி தீவின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த தீவிற்கு வர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் நீண்டகாலமாக வெளிநாட்டினர் பலர் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.