கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 98 சதவீதத்தினர் திறப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
ஊரடங்குக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால், தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பிளீச்சிங் பவுடர், குளோரின் கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது.
பள்ளிக்கு வரும்போது மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக கிருமிநாசினி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொற்று அறிகுறி ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்களை தனியாக ஒரு அறையில் அமர வைக்கவும், பின்னர் சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வகுப்புகள் தொடங்கிய உடன் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நீர்தேக்க தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்த பின்னர் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் நீலகிரியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொற்று பரவலை தடுக்க ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, உள்ளூர் மற்றும் வெளியூர் ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் பள்ளிக்கு வரும்போது கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை காண்பிக்க வேண்டும். நீலகிரியில் ஆசிரியர்களிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.