முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு விசமிகளால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் 13 ஆம் திகதி மாலை சேவையில் ஈடுபட்ட தனது பேருந்தை கொண்டு சென்று பேருந்து உரிமையாளர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டு கதவை தட்டுவது போன்ற சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்து பார்த்த போது பஸ் தீப்பிடித்து எரிந்ததாகவும் கண்ணாடிகள் வெடித்து சிதறிய சத்தமே தமக்கு கேட்டதாகவும் யாரோ வேண்டுமென்றே தீ வைத்திருக்க வேண்டும் எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மல்லாவி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மல்லாவி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டதோடு நேற்றையதினம் (14) தடயவியல் பொலிஸாரும் வருகைதந்து குறித்த விடயத்தை பார்வையிட்டதோடு இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த நாசகார செயலை செய்தவர்களை பொலிஸார் உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அவர்களிடம் இருந்து இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் எனவும் பேருந்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.