இலங்கையில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை), கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என கண்டறியப்பட்ட 10பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுய தனிமைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய 15 நாடாளுமன்ற பணிக்குழாமினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிமுக்கும் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களும் தொடர்ச்சியாக சிகிச்கைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் குமாசிறி ஹெட்டிகேவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
இந்நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எம்.ஏ.சுமந்திரன், கயந்த கருணாத்திலக்க மற்றும் தலதா அத்துகோரள ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.