அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி மீது, மோசமான கொலைக் (felony murder) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி காரெட் ரோல்ஃப் பதவி நீக்கப்பட்டதுடன் 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு பொலிஸ் மீதும் மோசமான தாக்குதல், பதவிப் பிரமாணத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அட்லாண்டா நகரில் முன்னெடுக்கப்பட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டத்தின் போது, 27 வயதான ரேய்ஷார்ட் புரூக்ஸ் (Rayshard Brooks) என்பவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
மற்ற வாடிக்கையாளர்களின் வருகையை தடுக்கும் வகையில் உணவு விடுதி முன் காரை நிறுத்தி ரேஷர்ட் உறங்கிய தகராறில் பொலிஸ் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் நிலையில், அவர், பொலிஸாரிடமிருந்து டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் இதனையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
இதையடுத்து, அட்லான்டாவில் புரூக்ஸ் சுடப்பட்ட இடத்தில் உள்ள உணவு விடுதியை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தியதுடன் நெடுஞ்சாலையில் போக்குவரத்தையும் முடக்கினர்.
இதேவேளை, புரூக்ஸை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அந்த நகர மேயர் அறிவித்தார்.
அத்துடன் அட்லான்டா பொலிஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் (Erika Shields) பதவியை இராஜினாமா செய்தார்.
ஜோர்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்தைத் தொடர்ந்து ரேஷர்ட் புரூக்ஸின் மரணம் அமெரிக்காவில், இனபாகுபாடுக்கு எதிரான போராட்டங்களை மேலும், தீவிரப்படுத்தி உள்ளது.