எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியதாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Room Where It Happened என்ற தலைப்பில் ஜோன் போல்டன் எழுதியுள்ள குறித்த புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வெஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், உய்குர் முஸ்லிம்களை பெருமளவில் தடுத்து வைப்பதற்காக சீனா வதை முகாம்களைக் கட்டுவதாக கடந்த ஆண்டு ட்ரம்பிடம் ஸி ஜின்பிங் கூறியபோது, ட்ரம்ப், முகாம்களைக் கட்டியெழுப்பி முன் செல்ல வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார். மேலும் இது சரியான செயலாகும் என்று அவர் நினைத்தார் என அதில் கூறியுள்ளார்.

அவர் விரும்பிய சர்வாதிகாரிகளுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்கான குற்றவியல் விசாரணையை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்ததாக அந்த புத்தகத்தில் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்கள் முன்னோட்டமிட்ட வரவிருக்கும் புத்தகத்தின் விபரங்களின்படி, அமெரிக்க விவசாயிகளிடமிருந்து விவசாய விளைபொருட்களை சீனா வாங்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புவதாக போல்டன் கூறுகிறார்.

ஆனால், இவை அனைத்தையும் டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். ஜோன் போல்டன் ஒரு பொய்க்காரர், வெள்ளை மாளிகையில் எல்லோரும் ஜோன் போல்டனை வெறுத்தனர் என கூறியுள்ளார்.

போல்டன் ஒப்பந்தங்களை மீறியதாகவும், இரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவரது புத்தகத்திற்கு தடை கோரி அமெரிக்க அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

ஆனால், புத்தகத்தின் நூறாயிரக்கணக்கான பிரதிகள் ஏற்கனவே உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதால், இந்த தடையுத்தரவு செல்லுபடியற்றதாகும் என புத்தக வெளியீட்டாளர் சைமன் அன்ட் ஸ்கஸ்டர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகையில் பணியில் இணைந்த 71 வயதான ஜோன் போல்டன், அடுத்த ஆண்டு செப்டம்பரில் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.