சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி தீக்‌ஷா (வயது 18) என்பவர் கலந்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தையின் பெயர் பாலச்சந்திரன். பல் டாக்டரான இவர் தனது மகள் மாணவி தீக்‌ஷாவுடன், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

 


அந்த மாணவி நீட் தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை மீது, சென்னை பெரியமேடு போலீசில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவி, அவரது தந்தை இருவரையும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். அதற்கு அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பரமக்குடியில் உள்ள தங்கள் வீட்டை பூட்டி விட்டு அவர்கள் குடும்பத்தோடு தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்க இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளதாகவும், பரமக்குடியைச் சேர்ந்த அவரை போலீசார் தேடி வருவதாகவும், தகவல் வெளியானது. அதை போலீசார் மறுத்தனர். இந்த நிலையில், கைதான டாக்டர் பாலச்சந்திரன், போலி மதிப்பெண் சான்றிதழை தனது கம்ப்யூட்டரில், தானே தயாரித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய டாக்டர் பாலச்சந்திரனின் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.

மேலும் மாணவி தீக்‌ஷாவை கைது செய்யவும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. அவர் ஆந்திரா தப்பிச்சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது. ஆந்திராவுக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.