டெல்லியின் புத்த விகார் பகுதியில், முக்கிய சாலையில் ஒரு பான்மசாலா போதைப் பொருள் தயாரிப்பு நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு குட்கா, பான்மசாலா மற்றும் போதைப் பொருட்கள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறாமல் வினியோகம் நடந்து வந்தது தெரியவந்தது.

அந்த நிறுவனத்தில் 8 எந்திரங்கள் மூலம், போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டதும், 65 பேர் பணியாற்றி வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த, எந்திரங்கள், மூலப்பொருட்கள், மற்றும் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள்கள் மத்திய வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4.14 கோடி ஆகும்.
 

அங்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், கையிருப்பு பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனம் ஏற்படுத்திய வருவாய் இழப்பை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். அப்போது அந்த நிறுவனம் இதுவரை ரூ.831.72 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரே இந்த மோசடி நிறுவனத்தின் அனைத்து திரைமறைவு வேலைகளையும் நடத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். டெல்லி மண்டலத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4 ஆயிரத்து 327 கோடி வரி ஏய்ப்பு மோசடி கண்டறியப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.