நாட்டிலேயே மிகப்பெரிய பஸ் நிலையமாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் இருக்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.


சி.எம்.டி.ஏ. பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கும், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், இதர மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் விரைவில் நவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்ற முக அடையாளத்தை வைத்து விவரங்களை அளிக்கும் கேமராவை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக இதுமாதிரியான நவீன கேமராக்கள் அங்கு அமைக்கப்படுகிறது.

ஒருவரின் முகத்தை வைத்து அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். இதை வைத்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து விட முடியும்.

இந்த புதிய நடைமுறைப்படி 50 கேமராக்களை ஒரே நேரத்தில் பொருத்தி 10 ஆயிரம் முகங்களை அடையாளம் காண முடியும். அதிகபட்சமாக 1 லட்சம் பேர் வரையில் அடையாளம் காண முடியும்.

இந்த நவீன கேமராக்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 18 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.64 லட்சம் வரை செலவாகும்.