மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடலாம் என்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாக மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் ஈரானும் பாரசீக வளைகுடாவில் பதற்றங்களைத் தூண்டுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றநிலையில், பெயர் வெளியிடாத நிலையில் பேசிய மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஈரானில் இருந்து மிகவும் கணிசமான அச்சுறுத்தல்களின் சமீபத்திய அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ரொக்கெட் தாக்குதல்களைத் திட்டமிடுவதும் இதில் அடங்கும்’ என கூறினார்.

ட்ரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குமாறு இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் வற்புறுத்தி வருவதாக பெயரிடப்படாத அமெரிக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி அரபு ஊடகங்கள் அறிக்கையை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டதன் பின்னணியில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதனிடையே வளைகுடா மற்றும் ஓமன் கடலில் இராணுவ பயிற்சி செய்வதை அமெரிக்கா நிறுத்துமாறு ஈரான் ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.