திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது65). இவரது மனைவி ஈஸ்வரி(55). இவர்கள் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தனர்.
இவர்களது மகன் உதயகுமார் (40). இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் தங்கி இருந்து பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மகனுக்கு திருமணமாகி 13 வருடங்களாகியும் குழந்தை இல்லை. இதன் காரணமாக ஆறுமுகமும், ஈஸ்வரியும் தங்களுக்கு பேரப் பிள்ளைகள் இல்லையே என்ற மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதற்காக தம்பதி 2 பேரும் கோவில், கோவிலாக சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ள கோவிலை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஆறுமுகம் குடும்பத்தினருக்கு அறிமுகமானார். அவர் ஆட்டோ ஓட்டுவது மட்டுமல்லாமல் மாந்திரீக தொழிலும் செய்து வந்தார்.
அவர் ஆறுமுகத்திடம் தனக்கு மந்திர, தந்திரங்கள், பரிகார பூஜைகள் பற்றி தெரியும். இதுவரை பலருக்கு பரிகார பூஜைகள் செய்து அவர்களுக்கெல்லாம் நல்லது நடந்துள்ளது. உங்கள் மகனுக்கு குழந்தை இல்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒரே ஒரு பரிகார பூஜை செய்தால் மட்டும் போதும். அதுவும் வீட்டில் செய்ய கூடாது. உங்களது கடையில் தான் செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி ஆறுமுகமும், அவரது மனைவி ஈஸ்வரியும் பரிகார பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்படி இன்று காலை 5 மணியளவில் ஆறுமுகமும், அவரது மனைவியும் தங்கள் கடைக்கு வந்தனர். மந்திரவாதி சக்திவேலும் பரிகார பூஜைகளுக்கு தேவையான பொருட்களுடன் அங்கு வந்தார். பின்னர் 3 பேரும் கடைக்குள் சென்றனர். தாங்கள் செய்யும் பரிகார பூஜை வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக கடைக்குள் சென்றதும், கடையின் ஷட்டரை பூட்டி விட்டனர். பின்னர் பரிகார பூஜைகளை அவர் தொடங்கினார்.
பின்னர் ஆறுமுகத்தையும், ஈஸ்வரியையும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும்படி சக்திவேல் கூறியுள்ளார்.
அப்போது திடீரென சக்திவேல் தான் பூஜைக்காக கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து ஈஸ்வரியையும், ஆறுமுகத்தையும் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறுமுகம் காயத்துடன் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து சக்திவேல், ஈஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு தப்பிச் சென்றார்.
காயத்துடன் மயங்கி கிடந்த ஆறுமுகம் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விழித்தார். அவர் தனது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். பின்னர் எழுந்து வந்து கடையின் ஷட்டரை வேகமாக தட்டினார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஷட்டரை திறந்து பார்த்தனர். அப்போது ஆறுமுகம் ரத்த காயத்துடனும், ஈஸ்வரி இறந்த நிலையிலும் கிடந்தனர்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக்திவேலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்து சக்திவேல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் வெள்ளக்கோவில் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.