மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம், போலீஸ் அமைப்பு தொடர்பான புள்ளி விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 1.1.2020 தேதியிலான புள்ளி விவரங்கள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்த புள்ளி விவரங்களின்படி, நாட்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த போலீசாரின் எண்ணிக்கை 26,23,225 என்றும், ஆனால் 20,91,488 போலீசார் தான் பணியில் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 5 லட்சத்து 31 ஆயிரத்து 737 பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் 511 பேருக்கு ஒரு போலீஸ் அனுமதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பயிற்சிக்காக கடந்த 2019-2020 நிதியாண்டில் ரூ.1,566.85 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
மேலும் பெண் போலீசாரின் எண்ணிக்கை 2,15,504 என்றும், மத்திய ஆயுதப்படை போலீசாரின் எண்ணிக்கை 9,82,391, மத்திய ஆயுதப்படை பெண் போலீசாரின் எண்ணிக்கை 29,249, 2019-ம் ஆண்டில் தேர்வான போலீசாரின் எண்ணிக்கை 1,19,069, மொத்த போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை 16,955, மாநில போலீஸ் பட்டாலியன்கள் 318, போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் 63, மொத்த போலீஸ் வாகனங்கள் 2,02,925 மற்றும் சி.சி.டி.வி கேமராக்களின் எண்ணிக்கை 4,60,220 என்றும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.