ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் தர்மேந்திர அனிஜா. இவரது மனைவி சப்னா.


இவர்களுடைய 8-வது திருமண நாளை கடந்த 24-ந்தேதி கொண்டாடினார்கள். விழாவில் மனைவிக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க வேண்டும் என்று தர்மேந்திர அனிஜா விரும்பினார்.

திருமண விழாவின் போது தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்குவதாக தெரிவித்தார். இதற்காக ஒரு சொத்து பத்திரத்தை சப்னாவிடம் கொடுத்தார்.

அது நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியதற்கான ஆவணம். தனது மனைவி சப்னா பெயரில் அதை வாங்கி இருந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘லூனா சொசைட்டி இன்டர்நே‌ஷனல்’ என்ற நிறுவனம் மூலம் இந்த நிலம் வாங்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு புத்த கயாவை சேர்ந்த நிரஜ் குமார் என்பவர் நிலாவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். நடிகர்கள் ஷாருக்கான், மறைந்த சுஷாந்த் சிங் ஆகியோர் இதற்கு முன்பு நிலவில் நிலம் வாங்கி உள்ளனர்.

இதை கேள்விப்பட்ட எனக்கும் நிலாவில் நிலம் வாங்கும் ஆசை ஏற்பட்டது. நிலம் வாங்கி அதை திருமண நாளில் மனைவிக்கு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தேன்.

இதற்கான நடைமுறைகள் முடிய ஒரு வருடம் ஆனது. நிலாவில் நிலம் வாங்கிய ராஜஸ்தானின் முதல் ஆள் நான் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.